சனாதன தர்மம்

சனாதன தர்மம்

சனி, 29 மார்ச், 2014

ஜாபால உபநிடதம்

ஜாபால உபநிடதம் என்பது சுக்ல
யசுர்வேதத்தைச் சார்ந்த உபநிடதம் ஆகும்.
அதர்வண வேதத்தைச்சேர்ந்தது என்றும்
ஒரு கூற்று உண்டு.

முக்திகோபநிஷத்தில்
ராமபிரான் ஆஞ்சனேயருக்கு உபதேசித்ததாகக்
கூறப்படும் 108 உபநிஷத்துக்களில்
இது 13வது உபநிஷத்து. இதை தொகுத்துக்
கூறியவர் ஜாபால மகரிஷியாதலால் இது ஜாபால
உபநிடதம் எனப் பெயர் பெற்றது.
இது ஆறு அத்தியாயங்கள் கொண்டது.
இவ்வத்தியாயங்களுக்கு கண்டங்கள்
என்று பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அவிமுக்தம் அல்லது வாராணசி

இதனில் 'அவிமுக்தம்' என்று கூறப்படும்
பரம்பொருளின் இடம் உடலிலுள்ள
புருவமத்தி என்று சொல்லப்பட்டிருக்கிறது.
அதை அறிந்தவனுக்கு ஸ்ரீருத்ரர்
தாரகமந்திரத்தை உபதேசித்து பிறவிப்
பெருங்கடலைத் தாண்டச் செய்கிறார் என்றும்
கூறப்படுகிறது.

'அவிமுக்தம்' நிலையாக உள்ள இடம்
உடலிலேயே சேவிக்கத்தக்க புண்ணியமான
இடமான புருவமத்தி. வரணா என்ற
புருவங்களுக்கும் நாசி என்ற மூக்குக்கும்
மத்தியில் உடலிலுள்ள இடமே வாராணசி .

இந்திரியங்கள் செய்யும் பாவங்களை 'வாரயதி'
தடுக்கிறது என்றதால் அது வரணா . பாவங்களைச்
செய்தபின் அவற்றை நாசம் செய்கிறது என்பதால்
நாசி . அது இம்மானுட உலகிற்கும் மேலுள்ள
தெய்வ உலகத்திற்கும் உள்ள சந்தி (= பாலம்,
அல்லது கூடுமிடம்). இந்த சந்தியையே ஞானிகள்
சந்தியாவந்தனம் என்ற அன்றாட பூசையில்
உபாசிக்கின்றனர். ஒரு சீவனின் உயிர்
உடலை விட்டுக் கிளம்புகையில் நெற்றிக்
கண்ணனாகிய ருத்ரர் அங்கு தோன்றி அந்த
சீவனுக்கு தாரகபிரம்மத்தை உபதேசித்து
உய்விக்கிறார் என்ற புராணக்
கூற்று வாராணசியைப் பற்றியது. இதன்
உட்கருத்து அவிமுக்தம் என்னும்
புருவமத்தியில் பரம்பொருளை தியானித்தால்
பரமசிவனுடைய அருள் சித்திக்கும் என்பதும்
அதனால் முக்தி கிடைக்கும் என்பதுமாகும்.

ருத்ரஜபம்
மூன்றாவது கண்டத்தில் ருத்ரஜபத்தின்
பெருமை விவரிக்கப்படுகிறது. ஸ்ரீருத்ரம்
ருத்ரோபநிடதம் என்னும் சிறப்புப் பெயர்
வாய்ந்தது. ஐந்தெழுத்து மந்திரமான சிவ
பஞ்சாக்ஷரீ மந்திரம் இதனில் உள்ளது. 101
யஜுர்வேத சாகைகளிலும் இன்னும் பல வேத
சாகைகளிலும் இது காணப்படுவதாலும், நூற்றுக்
கணக்கான வடிவங்களில் ருத்ரன்
இங்கு போற்றப்படுவதாலும் ஸ்ரீருத்ரத்திற்கு
சதருத்ரீயம் என்னும் பெயரும் உண்டு. ('சத'
என்னும் வடமொழிச் சொல்லுக்கு நூறு என்று பொருள்).
சதருத்ரீயத்தை ஜபித்தால் ஒருவன்
சாகாநிலை என்னும் வீடு பெறுவான்
என்பதை இக்கண்டத்தில் யாக்ஞவல்கிய
முனி அவருடைய சீடர்களுக்கு உபதேசிக்கிறார்.
துறவு
நான்காவது, ஐந்தாவது, ஆறாவது கண்டத்தில்,
சன்னியாசம் என்ற துறவைப்பற்றிய
நுணுக்கங்கள் விவரிக்கப்படுகின்றன.
இத்துறவில் மேன்மையானவர்களில் சிலர்:
ஆருணி, சுவேதகேது, துர்வாசர் , ரிபு, நிதாகர்,
ஜடபரதர், தத்தாத்திரேயர், ரைவதர், ஆகியோர்.
இவர்கள் பித்தர்களல்ல ராயினும் பித்தர்களைப்
போன்ற நடத்தை உடையவர்கள். பிறந்தமேனியாக
முடிச்சேதுமில்லாமல்,
தங்களுக்கென்று தங்குமிடமே இல்லாமல்,
இவர்கள் பரமஹம்ஸர்கள் எனப்படுவர்.
உலகச் செயல்களை வேருடன் களைந்தவர்களாய்
இருந்தவர்கள். அவர்களே வாழ்வாங்கு வாழ்ந்த
மேன்மக்கள் என்று இவ்வுபநிடதம்
கூறுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக