சனாதன தர்மம்

சனாதன தர்மம்

புதன், 26 மார்ச், 2014

கேன உபநிடதம்

வேதங்களின் சாரம் உபநிடதங்கள்
எனச் சொல்லுவார்கள் ! 'உப
நிஷத் ' என்றால் 'அருகில் வந்து அமர் '
எனப் பொருள். அப்படிப்
படித்து வருகையில் , என்னை மிகவும்
கவர்ந்த உபநிடதம் இது! 'கேன'
என்றால் " எவரால் ?" எனப்
பொருள் . " எவரால் [அ ]
எதுவால்" இந்த உலக இயக்கம்
நிகழ்கிறது என்பதை விளக்கும் வேதசாரம்
இதில் சொல்லப்படுகிறது .

அதைத் தமிழில்
இங்கு நான்கு பகுதிகளாக
அளிக்கிறேன் . பல உண்மைகளை இது புரிய
வைக்கும் . .. .. புரிய விழைபவர்க்கு .
புரியாதவர்கள் புரிய முற்படலாம்!!
நன்றி ! எங்கும் மங்கலம் சூழ்க ! தன்னைத்
தான் அறிக!
ஓம் ! ஓம் ! ஓம் !
**********

முதல் பகுதி

1.
சீடனெழுந்து கேட்கின்றான் :
ஓம்
மனமிங்கு தானெண்ணும்
செயல்நோக்கிச்
செல்லுவது எவரிட்ட கட்டளையால் ?
மூச்சிங்கு தன்செயலை முறையாகப்
புரிவதுவும் எவரிட்ட கட்டளையால் ?
பேச்சென்னும்
செயலொன்றை மக்களெல்லாம்
உரைப்பதுவும் எவரிட்ட கட்டளையால் ?
கண்களையும் செவிகளையும்
வழிநடத்தும் பரம்பொருளும்
எவரெனச் சொல்வீரோ ?

2.
ஆசிரியர் பதிலுற்றார் :
செவிகளின் செவி ,,
மனங்களின் மனம், பேச்சுகளின் பேச்சு
உயிர்களின் உயிர்,கண்களின் கண்
இவையெல்லாம் செய்கிறது !
' தான்' என்னும்
பொருளறிந்து, புலன்மீது பற்றறுத்து
உலகின்பம்
விடுவோரே அழிவின்றி நிலைக்கின்றார்!

3 - 4.
கண்ணாலும் ,
சொல்லாலும் , மனத்தாலும்
செல்லவொண்ணாப்
பேரிடமது
நாமறியாப் பொருளதுவே !
எவரிங்கு உணர்த்திடுவார்
என்றெவர்க்கும் தெரியாது
யாமறிந்த எதற்குள்ளும் இதையறிய
முடியாது
தெரியாத பொருளுக்கும்
மேலிருக்கும் பொருளிதுவே
இதையறிந்த அறிவோர்கள் இப்படித்தான்
எமக்குணர்த்திச் சென்றார் !

5.
எதுவொன்றை சொல்லாலும்
விளக்கிடவே முடியாதோ
எதன்மூலம்
சொல்லிங்கு எம்மிடையே வெளிப்படுகிறதோ
அதுவொன்றே ப்ரஹ்மன்
என்று நீ உணர்ந்திடுவாய் ;
மக்களிங்கு வழிபடும்
வேறெதுவுமல்ல ! [வேறு எந்த
தெய்வமும் அல்ல !]
*********
" எவரால் ?" [" கேன உபநிஷத் "] -- 2

6.
எதுவொன்றை மனமிங்கு தானுணர
மாட்டாதோ
எதுவொன்றால்
மனமிங்கு புரியப்படுகிறதோ
அதுவொன்றே ப்ரஹ்மன்
என்று நீ உணர்ந்திடுவாய் ;
மக்களிங்கு வழிபடும்
வேறெதுவுமல்ல ! [வேறு எந்த
தெய்வமும் அல்ல !]

7.
எதுவொன்றை கண்களிங்கு தான்
காண்பதில்லையோ
எதுவொன்றால்
கண்களிங்கு பார்வையென
உணர்கிறதோ
அதுவொன்றே ப்ரஹ்மன்
என்று நீ உணர்ந்திடுவாய் ;
மக்களிங்கு வழிபடும்
வேறெதுவுமல்ல ! [வேறு எந்த
தெய்வமும் அல்ல !]

8.
எதுவொன்றைச்
செவிகளிங்கு தான்
கேட்கமுடியாதோ
எதுவொன்றால்
செவிகளிங்கு கேட்பதினை உணர்கிறதோ
அதுவொன்றே ப்ரஹ்மன்
என்று நீ உணர்ந்திடுவாய் ;
மக்களிங்கு வழிபடும்
வேறெதுவுமல்ல ! [வேறு எந்த
தெய்வமும் அல்ல !]

9.
எதுவொன்றை மூச்சிங்கு தான்
நுகர முடியாதோ
எதுவொன்றால்
மூச்சிங்கு வாசனையை நுகர்கிறதோ
அதுவொன்றே ப்ரஹ்மன்
என்று நீ உணர்ந்திடுவாய் ;
மக்களிங்கு வழிபடும்
வேறெதுவுமல்ல ! [வேறு எந்த
தெய்வமும் அல்ல !]

__________
எவரால் ?" [" கேன உபநிஷத் "] -- 3

இரண்டாம் பகுதி :

1.
ஆசிரியர் மேலும் உரைக்கலானார்:
" யானறிவேன் நன்றாக ப்ரஹ்மன்
எதுவென்று " எனவிங்கு நீ
நினைத்தால்
அப்போதே நீயதனின் சிறுதுளியும்
அறியவில்லை என்றுணர்வாய்
மனிதனோ ,
கடவுளோ 'இது' வென்று சொன்னதையே நீயும்
அறிவாய்
எனவே யான் சொல்லுகிறேன் ,
' ப்ரஹ்மனை இன்னமும் நீயே தேடு !'

2.
சீடன் சொன்னான்:
' ப்ரஹ்மன் என்பதை இங்கே அறிவேன்
என்றே யானும் நினைக்கின்றேன் '
ஆசிரியர் கூறலுற்றார் :
' அதனை நன்கே நானும் அறிவேன்
என்றே யானும் எண்ணவும் இல்லை
எனக்கு அதனை அறியாதெனவும்
யானும் இங்கு எண்ணவுமில்லை
" அறியவும் இல்லை ; அறிந்தும் உளது "
என்றே இங்கே எம்மில் எவரோ
தான் உணர்வாரோ ,
அவரே ப்ரஹ்மனை அறிந்தவர் ஆவார் .

3.
எவரால் ப்ரஹ்மனை அறியாதுளதோ ,
அவரே அதனை அறிந்தவர் ஆவார்
எவரிதை இங்கு அறிந்தவர் என்பரோ,
அவரே அதனை அறியாதவராம்
அறிந்தவர் மூலம் அறிவதும் இல்லை
அறியாதவரோ அனைத்துமே அறிவார் !

4.
எவ்வொரு நிலையிலும்
ப்ரஹ்மனை உணர்வோர்
இதனை நன்கே அறிந்தவர் ஆவார்
அவ்வொரு நிலையில் அவரும்
இங்கே அழியாநிலையும் அடைவார்
ஆத்மா என்னும்
தன்னை உணர்வதால் தைரியம்
இங்கே பிறக்கிறது
அதனைப் பற்றிய அறிவை அடைவதால்
அழியாநிலையே கிடைக்கிறது

5.
தன்னை ஒருவன் இங்கே அறிந்தால் ,
வாழ்வின் உண்மை புரிந்துவிடும்
இங்கே இதனை அறியாவிட்டால்,
பேரழிவே வந்து எதிர்கொள்ளும்
தன்னைஇங்கே அனைத்திலும்
உணர்ந்து எல்லாம்
தானே என்பதை அறிந்து
உலகியலை விட்டுத் துறக்கும் அறிஞர்
அழியாநிலையே அடைந்திடுவார்

"" எவரால் ?" [" கேன உபநிஷத் "] - - 4

மூன்றாம் பகுதி :

1.
கதையொன்று சொல்கிறேன்
கேள் !
ப்ரஹ்மன்
ஒருமுறை கடவுளர்க்கு வெற்றி ஈட்டித்
தந்தது
ப்ரஹ்மன் தந்த வெற்றியால்
கடவுளர் மனமகிழ்ந்தனர்
' உண்மையில்
இவ்வெற்றி எம்முடையது;
புகழெல்லாம் எமக்கே '
எனத் தங்களைத்
தாங்களே மெச்சிக்கொண்டனர்

2.
அனைத்தும் அறிந்த ப்ரஹ்மன்
அங்கே அவர்கள் முன்னே தோன்றியது
வல்லமைவாய்ந்த
அப்பேரொளியை அவர்களால்
அறியமுடியவில்லை

3 - 6.
ஒளியின் தேவனை அவர்கள் அழைத்தனர்
' அக்கினித் தேவனே! நீ
சென்று அது எவரெனக்
கேட்டுவா !'
' அப்படியே!' எனச் சொன்ன
தீயின் கடவுள் அதனிடம் விரைந்தான்
' யாரடா நீ ?' என ப்ரஹ்மன்
வினவியது
' அக்கினியென அழைப்பர் என்னை !
அனைத்தையும் எரிப்பவன் ' [ஜாதவேதன் ]
என்றான் அக்கினி
' அனைவரும் அறியும் நின்னின்
செயல்திறன் என்ன ?' என
ப்ரஹ்மன் கேட்டது
' பூமியில் இருக்கும் எதையும் எரித்துச்
சாம்பலாக்கிடுவேன் ' என பதில்
வந்தது சருகொன்றை எடுத்து அவன்
முன்னே போட்டு ,' இதனை எரித்துக் காட்டு'
என ப்ரஹ்மன் சொன்னது
தன் திறனனைத்தும்
ஒன்றுகூட்டி அக்கினி அதனை எரிக்கமுயன்று முடியாமல்
திரும்பியது
அப்பேரொளியிடமிருந்து விலகி கடவுளரை அடைந்தான்
' என்னால் இதனை யாரென
அறிந்திட இயலவில்லை' எனச்
சொன்னான் .

"" எவரால் ?" [" கேன உபநிஷத் "] - - 5

மூன்றாம் பகுதி : [contd ]

7 - 10.
காற்றுதேவனை அழைத்த கடவுளர்,
' யாரது அதுவென
விடைகண்டுவா ' என அனுப்பினர்
' அப்படியே!' எனச் சொன்ன
காற்றின் கடவுள் அதனிடம்
விரைந்தான்
' யாரடா நீ ?' என ப்ரஹ்மன்
வினவியது
' மாதரிச்வன் ' என்னும்
காற்றுத்தேவன் என என்னை அழைப்பர்'
என்றான் வாயு ' அனைவரும் அறியும்
நின்னின் செயல்திறன் என்ன ?'
என ப்ரஹ்மன் கேட்டது
' பூமியில் இருக்கும் எதனையும்
எங்கே வேண்டினும்
கொண்டுசெல்பவன்
யான் ' பதிலிறுத்தான்
காற்றுத்தேவன்
சருகொன்றை எடுத்து அவன்
முன்னே போட்டு ,' இதனை எடுத்துச் செல்'
என ப்ரஹ்மன் சொன்னது
தன் திறனனைத்தும்
ஒன்றுகூட்டி வாயு அதனை தூக்கமுயன்று அசைக்கக்கூட
முடியாமல் திரும்பினான்
அப்பேரொளியிடமிருந்து விலகி,
கடவுளரை அடைந்தான் காற்றுத்தேவன்
' என்னால் இதனை யாரென
அறிந்திட இயலவில்லை' எனச்
சொன்னான் .
11 - 12.
கடவுளர் அனைவரும் இந்திரனைப்
பார்த்து ,
' மகவான் என்னும் இந்திரனே!
அப்பேரொளி எவரெனக்
கண்டுவருக !' என்றனர் ' அப்படியே!'
எனச் சொன்ன இந்திரன்
அதனிடம் விரைந்தான்
ஆனால்
பேரொளி சட்டென
மறைந்து சென்றது
ஏதுமறியா இந்திரன்
உடனே அங்கே வசிக்கும் அனைவரும்
போற்றும் ஒரு பெண்ணிடம்
சென்றான்
அவளே உமையாள் ; இமவான்
பெற்ற எழில்நிறைச் செல்வி ! '
என்முன் இருந்து சட்டென மறைந்த
அப்பேரொளி எதுவென
இயம்பிட வேண்டும்' என வேண்டினான்.
____________________ -
எவரால் ?" [" கேன உபநிஷத் "] -- 6
நான்காம் பகுதி :
1.
' அதுவே ப்ரஹ்மன் என்றே அறிக'
என்றாள் உமையாள்
' ப்ரஹ்மன் செய்த
உதவியால்தான்
நினக்கு வெற்றியும்
பெருமையும்
வந்தது என்பதை அறிவாய் நீயும் !'
அதன்பின் இந்திரன் தானும்
அறிந்தான் " வந்தது ப்ரஹ்மன்"
என்னும் உண்மையை.
2.
ப்ரஹ்மனின் அருகில்
சென்றடைந்தமையாலும் ,
இவரே ப்ரஹ்மன் என்றுணர்ந்த
முதன்மையினாலும்
அக்கினி, காற்று , இந்திரன் மூவரும்
மற்றோரை விடவும் மேலோராயினர்
3.
மிகவே அருகினில் சென்றதினாலே
முதலில் இவரை அறிந்ததினாலே
இவருளும் இந்திரன்
முதன்மையாயினான்
4.
இதுவே அவர்கள் பிற
கடவுளர்க்கு ப்ரஹ்மனைப்
பற்றி சொல்லிய கருத்து:
' மின்னலைப் போலும் தன்மையது " இது";
கண் இமைப்பதுபோலும் அரியது " இது"'.
5.
' தான்' எனும் தன்மைக்கு ப்ரஹ்மனைப்
பற்றிச் சொல்லிய
அறிவுரை இது:
' மனம்'எனும் ஒன்று இயல்பாய்த்
தானே ப்ரஹ்மனைச்
சென்று அடைகிறது
அறிந்திட விரும்பும் பயிற்சியாளர்
மனதின்
வழியே ப்ரஹ்மனை நெருங்கி
அதனுடன் அடிக்கடி பேசிட முடியும்
மனதின் ஒப்புதல் இருந்தால்
மட்டுமே இதுவும் நிகழும்.
6.
அப்படி மனதால் உணரும் 'ப்ரஹ்மன்'
" தத்வனன் ' என்று அழைக்கப்படுவார்
' போற்றப்படும் அனைத்துக்கும் மேலாய்ப்
போற்றப்படுவது' என்பது இதனின்
பொருளாம்
' தத்வனன்' என்னும் பெயரால்
இதனைப் போற்றிட வேண்டும்
மண்ணில் இருக்கும் எவரும் ப்ரஹ்மனைப்
போற்றுதல் , இப்படியே நிகழ்ந்திட வேண்டும் .
____________________ -
" எவரால் ?" [" கேன உபநிஷத் "] -- 7
நான்காம் பகுதி : [contd ]
7.
சீடன் கேட்டான் :
' உபநிடதப்
பொருளை எனக்கு உபதேசிக்க
வேண்டும் '
ஆசிரியர் அவனைப் பார்த்து இப்படிச்
சொன்னார் :
' ஏற்கெனவே நான்
உனக்கு உபநிடதம்
சொல்லிவிட்டேன்
ப்ரஹ்மனைப் பற்றிச்
சொன்னதே 'அது'வென
உணர்வாய் நீயும் '.
8.
எளிமை , சுயக் கட்டுப்பாடு, மற்றும்
தியாகச் செயல்கள்
இவையே ப்ரஹ்மனின் கால்கள் ஆகும்,
மறைகள் எல்லாம் கைகள் ஆகும்
உண்மை அதனின் உறைவிடம் ஆகும்.
9.
இதுவரை இந்த உபநிடதம்
சொல்லிய உண்மையை
உணர்ந்தவர் பாவம் களையப்படுமே
மேலும் அவர்கள் எல்லையில்லாப்
பேரானந்தத்தில்
உறுதியுடனே நிலைபெறுவாரே .
ஆம் ... மிகவும் உயரிய பேரானந்தம் !
10 .
ப்ரஹ்மன் நம்மை [ஆசிரியர், சீடன் ]
பாதுகாக்கட்டும் !
அறிவின் பொருளை அந்தப்
ப்ரஹ்மன் நமக்கு அருளட்டும்!
அறிவை அடையும் திறனை நாமிருவரும்
பெறுவோமாக !
நீயும் நானும் படித்ததின் பயனாய்
உண்மை எமக்குப் புலப்படட்டும்!
ஒருவருக்கொருவர் தீய
உணர்வுகள் எமக்குள்
இங்கே வாராதிருக்கட்டும் !
ஓம் ! அமைதி , அமைதி , அமைதி !
கேன உபநிடதம் முற்றிற்று .

நன்றி காஞ்சி போரம்

1 கருத்து: